மூலம் :- மலேசியா இன்று

30 Mar | செய்தி.

தற்போது தலை தூக்கி நிற்கும் பிரச்சனைகளில் இண்டர்லோக் நாவலும் ஒன்று. மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இந்த நாவலை மீட்டுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 
 
“நாங்கள் எங்கள் சுய மாரியாதையை இழக்க விரும்பவில்லை; உரிமைகளை இழக்க விரும்பவில்லை. மலேசியாவில் பிறந்து பல துறைகளில் பல சாதனைகள் புரிந்த நாங்கள் மார்தூக்கி பீடு நடை போட வேண்டியவர்கள். ஆனால் இந்நாவலில் இந்தியர்களையும் சீனர்களையும் இழிவுப்படுத்தியும் தாழ்மைப்படுத்தியும் எழுதியிருப்பதை பார்த்தால் நாங்கள் கூனிக் குறுகி தலைகுனிந்து மடிய நேரிடும்”, என பல இந்தியர்கள் கருதுகின்றனர் என சார்லஸ் மேலும் விளக்கினார்.
 
துணைப் பிரதமர் இந்நாவல் விவகாரத்தில் முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், ஒப்புக்கொண்ட சில திருத்தங்களுடன் மீண்டும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்ற முடிவில் ஆணித்தரமாக இருப்பதாகவும் இன்று அறிக்கை வெளியிட்டு இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் இந்தியர்களின் உணர்ச்சியை புரிந்துக் கொள்ளவில்லை.
 
ஆதலால், இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்க களம் இறங்கியிருக்கும் பிரதமர் முதலில் இந்தியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்ள  உத்தரவிட வேண்டும்.  அப்போதுதான் இந்தியர்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை பிறக்கும். பிரதமர் “ஒரே மலேசியா”  கொள்கையில் இந்தியர்களை ஒதுக்கவில்லை, வேறுப்படுத்தவில்லை என நிரூபிக்க முடியும்.
 
“பிரதமரே, உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற தயாரா? இந்தியர்களின் பிரச்சனைகளில் முதல் பிரச்சனையாக இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்ள தயாரா?”, என சார்ல்ஸ் சந்தியாகோ வினவினார்