22 Jul | செய்தி| மலேசியாஇன்று

முதன்முறையாக நாட்டின் தேர்தல் முறையில் சீர்திருத்தம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த பெர்சே இயக்கத்தின் தலைவி அம்பிகாவின் தைரியத்தையும், தலைமைத்துவத்தையும், அவரது நியாயமான போராட்டத்தையும் தாம் வரவேற்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஆனால், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்காக போராடும் பெர்சே 2.0 இயக்கத்திற்கு எதிரானத் தடைகள் அனைத்தும் அடிப்படையற்றவை என கூறிய சார்ல்ஸ், பெர்சே 2.0 பேரணியை நடத்துவதற்கு முன்பும் பேரணி நடந்த அன்றும் பல தரப்பினரின் பல்வேறு கடுமையான எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி, மருட்டளுக்கெல்லாம் பயப்படாது, பல்லாயிரக்கான மக்கள் பெர்சே பேரணியில் பங்கேற்றது மக்கள் அரசாங்கத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிருப்தி அடைந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றாரவர்.

சிலர் அம்பிகாவின் தைரியத்தைப் பாராட்டவில்லை, அவரது கோரிக்கைகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரை மிகக் கடுமையாக சாடினர், அவரின் குடியுரிமையைப் பறிக்க பரிந்துரைத்தனர். இந்த முறையற்ற செயல்களை சார்ல்ஸ் கண்டித்தார்.

“உண்மையில், ஒவ்வொரு மலேசியனும், குறிப்பாக இந்தியர்கள், அவருக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமும் அவருக்கும் பேரணிக்கும் வற்றாத ஆதரவு வழங்க வேண்டியது மிக அவசியம்”, என்பதை சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

பெர்சே 2. 0 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், மலேசியாவில் நேர்மையான தேர்தல் நடைபெறுவது மட்டுமில்லாமல், நல்லாட்சியையும் மக்கள் நலன் காக்கும் அரசாங்கத்தையும் மக்களே நியாயமாக தேர்தெடுக்க வழி பிறக்கும் என்றாரவர்.

நல்லாட்சி வழங்கும் அரசாங்கத்தின் மூலம் மக்களின் நிலை, குறிப்பாக மலேசிய இந்தியர்களின் நிலை, உயர அதிக வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், ஏன் நமது மஇகா தலைவர்கள் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்காமல் அமைதி காத்து வருகின்றனர் என்று வினவினார்.

“மலேசியாவில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை பல்வேறு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மாற்றங்கள் மிக முக்கியம். அது மக்கள் கையில்தான் உள்ளது”, என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், அம்பிகாவின் மீது அவதூறுகளை பரப்பும், குடியுரிமைப் பறிக்க சொல்லும் தரப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், நியாயமான விஷயங்களுக்காக மக்கள் ஒன்றுகூடுவது மிக முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.