மூலம் :- செம்பருத்தி

Wednesday, July 13, 2011 7:10 pm

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியில் பல்லாயிரக் கணக்கான மலேசியர்கள் ஒன்றுகூடி தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். அதில் இந்தியர்கள் பலரும் கலந்துகொண்ட போதிலும் இந்தியர்கள் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை என கூறும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுவின் பேச்சு மிக வேடிக்கையாக இருக்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இளையர்கள், முதியவர்கள், தனியார் நிறுவனத்தினர், அரசு சார்பற்ற இயக்கங்கள், பெண்கள் உட்பட எதிர்கட்சி தலைவர்கள், போராட்டவாதிகள் என பல இந்தியர்கள் பல இடங்களில் வந்து மலையாய் குவிந்தது அவரது கண்களுக்கு தென்பட வில்லையா? என வினவிய சார்ல்ஸ் சந்தியாகோ, வராத இந்தியர்கள் அம்னோவுக்கு பயந்து ஒளிந்துக் கொள்ளும் கூட்டங்களே எனவும் சாடினார்.

இந்தியர்கள் பலர் எழுச்சிக் கண்டுவிட்டதால்தான் பலர் ஒன்று கூடினார்கள் என்பதை முதலில் அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். வராத இந்தியர்கள், முதுகெலும்பு இல்லாத மஇகா தலைவர்களும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு கும்புடுப் போடும் கூட்டம் மட்டும்தான் என சாடிய சார்ல்ஸ் அவர்களும் இப்பேரணியில் கலந்துக்கொண்டிருந்தால் அம்னோ அவர்களுக்கு மதிப்பு கொண்டுத்திருக்கும் என வேடிக்கையாக கூறினார்.

தேசிய முன்னணி – அம்னோ அரசாங்கத்திற்கு கூனிக்குறுகி தாளம் போடுவதை நிறுத்தி விட்டு, இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்க வழி காண வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய சார்ல்ஸ், 50 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இந்த மஇகா இந்தியர்களின் பிரச்சனை எதையும் தீர்த்தபாடில்லை என வருத்தம் தெரிவித்தார்.

தவறான தகவல்களை அளித்து இந்திய சமூகத்தினரை திசை திருப்ப நினைக்கும் மஇகா தலைவர்களின் எண்ணமும் திட்டமும் வெற்றியடைய போவதில்லை.

நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்காக போராடும் பெர்சே 2.0இல் கலந்துகொண்ட இந்தியர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மஇகாவின் நிலை தடுமாற்றத்திலும் கேள்விக் குறியிலும் இருப்பதை அறிந்துதான் அவர் இப்படியெல்லாம் அறிவிக்கிறார் என சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், இதனை எல்லாம் நிறுத்திவிட்டு இந்தியர்களின் நலன் காக்க பேசுங்கள் என அறிவுறுத்தினார்.

நேர்மையான மற்றும் நியாமான தேர்தல் நடைபெற்றால், மலேசியாவில் வாழும் அனைவரின், குறிப்பாக வறுமையில், ஏழ்மை நிலையே கதியென அல்லல்படும் நமது இந்தியர்களின் தலை எழுத்தும் மாறும் என சார்ல்ஸ் மிக ஆணித்தரமாக வலியுறுத்தினார்.