15 Jul | செய்தி| மலேசியாஇன்று

அண்மையில் கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் அறுவரையும் இன்னும் விடுதலை செய்யாமல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயாலாகும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

மனித உரிமையைத் தட்டிகேட்டும் அவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க இருந்ததாக குற்றம் சாட்டப் பட்டு, அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று வரையில்,14 நாட்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனித உரிமையை ஒட்டு மொத்தமாக குழி தூண்டிப் புதைப்பது போலாகும்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்னை, நிலப் பிரச்னை, குடியிருப்பு பிரச்னை போன்ற மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த இந்தத் தலைவர்களை கைது செய்து இருப்பது மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது என கூறிய சார்ல்ஸ், போலீசார் கூறுவதுபோல் அவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமே தவிர அவர்களைச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்துதலும் துன்புறுத்தலும் கூடாது என்றார்.

சந்தேகத்தின் பேரில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க  போலீசாரிடம் ஆதாரம் இல்லை என்றால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திய சார்ல்ஸ், அவ்வாறு செய்யாமல் இருந்தால் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் மக்களின் கடுஞ்சினத்திற்கு ஆளாவார் என்று எச்சரித்தார்

“சாட்சியம் இருந்தால், அந்த அறுவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். இல்லையேல், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்”, என்று சார்ல்ஸ் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.