மூலம் :- செம்பருத்தி Wednesday, June 15, 2011 10:08 pm

இந்தத் தவணை நாடாளுமன்றத்தில் வாக்களித்திருந்தவாறு ஏன் குறைந்தபட்ச சம்பள சட்ட முன்வரைவு விவரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை என்பதனை அரசாங்கம்  விளக்க வேண்டும் என ஜசெக கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தச் சட்ட முன்வரைவை, 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணை வேறு எதையோ காட்டுகிறது என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இதற்கு முன்பு, இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தபட்ச சம்பளக் கொள்கை கொண்டு வரப்படும் என பெமண்டுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலா, அறிவித்திருந்ததாக சார்ல்ஸ் கூறினார்.

“இந்த அமலாக்கத் திட்ட முறை உண்மையானால், அதன் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை பற்றி விவாதம் நடத்த முடியும். இதில் வியப்பளிப்பது என்னவென்றால் அரசாங்கமே அதன் சட்ட முன்வரைவை இம்மாதம் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தும் அதை செயல்படுத்தாமல் இருப்பதுதான்.

“இதிலிருந்து நமது அரசாங்கம் குறைந்தபட்ச  சம்பளம் விவகாரத்தில் அக்கறையில்லாமலும்  ஆர்வமில்லாமலும் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என சாடிய சார்ல்ஸ், அந்த சட்ட முன்வரைவை நாம் விவாதம் செய்ய வேண்டும்; பொது மக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்”, எனவும் அவர் வலியுறுத்தினார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ், அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் “தேசிய சம்பள ஆலோசனை மன்றம்” கண்ணியமான வாழ்க்கைக்கான சம்பள மன்றம்” என பெயர் மாற்றம் செய்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.

“நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு “கண்ணியமான” சம்பளமாக ரிம 1500 – ரிம 2500 வரை இருத்தல் வேண்டும். இந்த சம்பள அளவுதான் அவர்களது கடனைக் குறைக்கவும், உதவித்தொகை கழிவை எதிர்கொள்ளவும் உதவியாக இருக்கும்”, என்றார் அவர்.

பிரதமர் நாஜிப் துன் ராசாக், மலேசியாவின் தேசிய அளவிலான வருமானம் 2010 – ஆம் ஆண்டு ரிம 660 பில்லியனிலிருந்து 2020-ல் ரிம 1.7 லட்சம் கோடி அடைய வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளார்.

அவரது நிர்வாகமோ இவ்வருடம் குறைந்தபட்ச சம்பள கொள்கையை அமலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், தங்களது வியாபாரம் பாதிப்பு அடையும் என பயப்படும் முதலாளிகளிடமிருந்து பல தடைகளை அது சந்தித்துள்ளது என சார்ல்ஸ் தெரிவித்தார்.