மூலம் :- மலேசியா இன்று 31 May

 கிள்ளான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதற்குச் சொந்தத் தொழில் செய்வது முக்கியம் என்பதால் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் மே 29 -இல் சிலாங்கூர் நகர்புற ஏழை மக்களுக்காக மைக்ரோ கிரெடிட் (சிறிய கடனுதவி) ஏற்பாடு செய்யப்பட்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
சிறு வியாபாரம் செய்ய ஆர்வமுள்ளோர் அனைவரும் சிறு பண உதவியை எதிர்பார்த்து திரண்டு வந்திருந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறிய சார்ல்ஸ், தலா 130 பேர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டு பிரமிக்க செய்து விட்டனர் எனக் கூறினார்.
 
இப்பட்டறையில் கலந்து கொண்டவர்கள் ஏதேனும் ஒரு சிறு வியாபாரத்தை தொடங்க வேண்டும் அல்லது ஏற்கனவே செய்துக் கொண்டிருக்கும் வியாபாரத்தை விரத்தியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக பண உதவியை நாடி வந்திருந்தனர்.
 
இவர்களுக்கு உதவும் வகையில் கடனுதவிகளை அரசாங்கம் வழங்கினால் கட்டாயம் இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்த சார்ல்ஸ், இது ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு எனவும் கூறினார்.
 
குறிப்பாக, மலேசியாவில் இந்தியர்களின் பொருளாதாரம் கடந்த பத்து வருட காலமாக தேக்க நிலையிலே உள்ளது. தற்போது 1.6 விழுக்காட்டில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்த இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதுமட்டுமின்றி, வறுமையில் தவிக்கும் குடும்பங்களும், தனித்து வாழும் தாய்மார்களும், நடுத்தர வருமானம் பெரும் குடும்பத்தினர்களும் ஏழ்மையிலிருந்து மீட்சி பெறவும் இவ்வாய்ப்பு வழிவகுக்கும். இதனால் இந்தியர்களின் பொருளாதார நிலை மேலும் உயர ஏதுவாக இருக்கும் என்றார் சார்ல்ஸ்.
 
இப்பட்டறையை வழிநடத்திய நோராயின் மலேசியாவில் இவ்வாறு சிறு தொழில் செய்பவர்களுக்கு வட்டி இல்லாக் கடன் உதவி வழங்குவது இதுவே முதல் முறை எனக் கூறினார்.  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்த முயற்சியையும் கொள்கையையும் தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்.
 
எதிர்பார்த்த அளவிற்கு மேலாக மிக அதிகமாகவே வரவேற்பு கிடைத்ததால், மேலும் இதே பட்டறையை மறுமுறையும் செய்ய எண்ணம் கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர்களும் ஜசெக உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோவும் கூறினர். இம்முறை இப்பட்டறையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அடுத்தமுறை தாராளமாக கலந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
 
மேலும், “மக்கள் நன்மைக்காகவும் அவர்களது மேம்பாட்டிற்காகவும்  சிலாங்கூர் மாநில அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது. ஆகவே, மக்களது ஆதரவு என்றும் மக்கள் கூட்டணிக்கு தொடர்ந்து கிடைத்தால்தான் மேலும் பல விதத்தில் பல நன்மைகளை அடைய முடியும்”, என வலியுறுத்தினார் சார்ல்ஸ்.