மூலம் :- மலேசியா இன்று

26 Feb | செய்தி.

நமது தலைவர்களும் மக்களும் மலேசியா ஒரு ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் ஜனநாயகம் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறார் டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இண்ட்ராப் நடத்த திட்டமிடிருக்கும் பேரணியை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் பங்கேற்பவர்கள் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், “இவரின் கூற்று வேடிக்கையாக இருக்கிறது. மலேசியா ஒரு ஜனநாயக நாடு; நமக்கு பேச்சு உரிமை இருக்கிறது. ஆனால், இண்ட்ராப் பேரணி நடத்தக்கூடாது. இது அரசாங்கம் மக்களின் உரிமையைப் பறிப்பதாகும்”, என்றார்.

இண்ட்ராப் நடத்தும் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டால், அக்கோரிக்கையை நிராகரித்து விட்டு இது சட்ட விரோத நடவடிக்கை; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுதல் சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அவர் மேலும் கூறினார்.

“சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலுக்கு எதிராக நடத்தப்படும் பேரணிக்கு தடை போடுவது ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவர்களது உரிமைகளையும் அரசாங்கம் உதாசீனப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இது எங்கள் உரிமை. இப்பேரணி மலேசிய இந்திய சமூகத்தின் குரல். அதைத் தடுக்கும் அரசாங்கத்தின் செயல் கண்டிக்கத்தக்கது.

“இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காப்பதும், இந்தியர்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாமல், மதிக்காமல் இருப்பது இந்தியர்களின் மனதை மேலும் நோகச் செய்கிறது.

“ஆகவே, இந்தியர்களின் கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இண்ட்ராப் பேரணி நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்குவது மட்டுமில்லாமல், இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றார் சார்ல்ஸ்.